குடிநீர் விநியோகிப்பு இயந்திரத்தின் வழியாக நீர் விநியோகிப்பினைச் செயல்படுத்த அரசாங்கத்திடமிருந்து முறையான உரிமம் பெறவேண்டும் – புதிய சட்டம் அமலாக்கத்திற்கு வரும்

0
338

புத்ராஜெயா (Mytimes)– நாட்டில் பல இடங்களில் செயல்பட்டு வரும் குடிநீர் விநியோகிப்பு இயந்திரம் (Water Vending Machine) பாதுகாப்பாகவும் சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும். அதேநேரத்தில், எத்தகைய தீய விளைவுகளையும் கொண்டு வராமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு அதற்கான சட்டங்களைக் கையாளவுள்ளது. மேலும், இத்தகைய இயந்திரங்கள் சுகாதார அடிப்படையில் இயங்குவதற்குச் சுகாதார அமைச்சு சில வரைமுறைகளை வகுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் அறிவித்தார்.

நாட்டில் பல இடங்களில் இந்த இந்த குடிநீர் விநியோகிப்பு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக, பெரிய வீடமைப்புத் திட்டங்களிலும், சில இடங்களில் விற்பனைக்காகவும் இந்நீர் விநியோகிக்கப்படுகின்றது. குழாயிலிருந்து பெறப்படுகின்ற நீரை சுத்திகரித்து அதனை இத்தகைய இயந்திரம் வழியாக விநியோகித்து வருகின்றனர். இந்தக் குடிநீர் விநியோகிப்பு இயந்திரத்தின் சுகாதார அம்சங்களை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு அதற்கான சட்டங்களை அமல்படுத்தவுள்ளது.

இந்தச் சட்டமானது வரக்கூடிய ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து அமலாக்கத்திற்குக் கொண்டு வரப்படுகின்றது. அதற்கு பிறகு யாரேனும் இந்த இயந்திரத்தின் வழியாக நீர் விநியோகிப்பினைச் செயல்படுத்த வேண்டுமென்றால் அரசாங்கத்திடமிருந்து முறையான உரிமத்தை முதலில் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, அந்த இயந்திரம் வழியாக விநியோகிக்கப்படும் குடிநீரானது சுகாதார அமைச்சால் நிருணயிக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு அம்சங்களைக் கட்டாயம் பின்பற்றியிருக்க வேண்டும். அவ்வம்சங்களை முறையாகப் பின்பற்றினால் மட்டுமே அதற்கான உரிமத்தை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். இதுவரையில், உரிமம் கோரி 2,540 விண்ணப்பங்கள் வந்துள்ளது

ஏனெனில், சில நேரங்களில் இத்தகைய இயந்திரங்களில் இருந்து வரக்கூடிய நீரினைப் பரிசோதித்துப் பார்க்கும்பொழுது அதில் கிருமிகள் தாக்கப்பட்டிருப்பதும் சில இயந்திரங்கள் தூய்மையான முறையில் பராமரிக்கப்படாமல் செயல்பட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. சில இயந்திரங்களின் வழி விநியோகிக்கப்படும் குடிநீர்களை அருந்துவதால் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக, இத்தகைய குடிநீரின் வழி இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று வேறு விதமான முறையில் அந்நீருக்கு முக்கியத்துவம் வழங்கும் வண்ணம் செயல்படுத்தப்படுகின்றது. ஆனால், இவையனைத்தும் ஆதாரமற்ற கூற்றுகள். எனவே, அப்படி ஏதேனும் விளம்பரப்படுத்தப்பட்டால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேநேரத்தில், சுகாதார அமைச்சு நிருணயித்துள்ள வரமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அதனை விநியோகிப்பவர்களுக்கு ஐயாயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஈராண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் சாத்தியங்கள் அதற்கான சட்டங்களில் உள்ளது.

எனவே, பொதுமக்கள் தாங்கள் தினசரி அருந்தும் குடிநீரானது பாதுகாப்பனதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கொதிக்க வைத்த நீரை அருந்தும் பழக்கத்தை வழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் அறிவுறுத்தினார். (Mytimes)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here