துருக்கி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: 13 மணிநேரம் தாமதமாகக் கிளம்பியது

0
290

டெல்லி, ஜூலை 8-  பேங்காக்கிலிருந்து,  துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கிச் சென்ற துருக்கி நாட்டு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான மிரட்டலைத் தொடர்ந்து, டெல்லியில் அவ்விமானம் சல்லடையாக சோதித்துப் பார்க்கப்பட்டது. உண்மையிலேயே வெடிகுண்டு இல்லை என தெரிந்ததும், 13 மணி நேரத்திற்குப் பின்னர், இன்று காலையில் விமானம் புறப்பட்டது.

பேங்காக்கிலிருந்து 144 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாட்களுடன்  இஸ்தான்புலுக்கு தர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது.அந்த விமானம், இந்திய வான் எல்லையில், மகாராஷ்டிரா  மாநில விமானக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பறந்துக்கொண்டிருந்தபோது, திடீரென  பைலட்டுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.“இந்த விமானத்தின் சரக்குப் பகுதியில் வெடிகுண்டு உள்ளது என விமான பாத்ரூம் கண்ணாடியில் லிப்ஸ்டிக்கில் யாரோ எழுதி வைத்துள்ளதாக விமானிக்குத் தகவல் கிடைத்தது.

பதற்றமடைந்த பைலட் விமானக் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் கொடுத்தார்.  இதனையடுத்து, நாக்பூர் விமான கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள், உடனடியாக விமானத்தை டெல்டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்குமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து, விமானம் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் தரையிறங்கியது. பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றிய பிறகு தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் கட்டுப்பாட்டின் கீழ் விமானநிலையம் கொண்டு வரப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள், விமானத்தை சோதனை செய்ததில், வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து பயணிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், யார் அவ்வாறு எழுதியது என்ற துப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து 13 மணி நேரம் கழித்து, இன்று அதிகாலை 3.16 மணிக்குத் தான்  விமானம் மீண்டும் புறப்பட்டது-Vaanavil News

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •