டத்தோ டி.மோகன் பத்திரிக்கை செய்தி!

0
590

மஇகா வின் சொத்துக்கள் தனி நபர் பெயரில் இருக்கிறதா? பட்டியலிட்டு காட்டுங்கள்!

தனி நபர் பெயரில் இருந்தால் உங்களோடு கைகோர்க்க நான் தயார்!

டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுக்கு டத்தோ டி.மோகன் சவால்.

கோலாலம்பூர் ஆக 9 –

இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் முதன்மைக்கட்சியான மஇகா தனது அரசியல் சரித்திரத்தில் பல போராட்டங்களை எட்டியுள்ளது. ஆனால் அன்றைய காலக்கட்ட போராட்டங்கள் ஆரோக்கியமானதாகவும், சமுதாய சிந்தனை கொண்டிருந்ததாகவும் இருந்தது. ஆனால் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்கள் கொள்கை இல்லாது பொய்களின் மறு உருவமாக இருந்து கொண்டு மஇகா வின் சொத்துக்கள் தனி நபர் பெயரில் இருப்பதாகவும், அதனை மீட்டெடுக்க போராடுவதாகவும் கூறி  மீண்டும், மீண்டும் பொய்யுரைத்து வருகிறார். இவர் தனி நபர் பெயரில் இருக்கும் மஇகா சொத்துக்களை பட்டியலிட்டு காட்ட தயாராக இருந்தால் அவருடன் இணைந்து அந்த சொத்துக்களை மீட்டெடுக்க நான்  தயார் என டத்தோ டி.மோகன் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

தனது அரசியல் சூழ்நிலையை தற்காக்கவும், கூட்டங்களில் கைதட்டல் வாங்குவதற்காகவும் உண்மைக்கு புறம்பானவற்றை பேசுவது அர்த்தமற்றது. இங்கே யாரும் அறிவிலிகளாக இல்லை. டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அடித்து வரும் அந்தர் பல்டிகளை மஇகாவினரும், சமுதாயத்தினரும் உற்றுநோக்கி வருகிறார்கள். ஆகவே அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசுவதை நம்புவதற்கு சமுதாயத்தினர்கள் தயாராக இல்லை என்பதை இவர் புரிந்து கொள்ள வேண்டும்.

தெளிவான சிந்தனயோடு உற்றுநோக்கினால் இவரின் அரசியல் கபட நாடகங்களை நாம் அறியலாம். என்னுடைய நிலைப்பாட்டில் நான் அவரிடம் கேட்க விரும்புவது என்னவென்றால் இன்று வெற்று அறிக்கை வழி சமுதாயத்திற்கு போராடுவது போல பாசாங்கு செய்து வரும் இவர் இதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார். கட்சிக்குள் மறுமலர்ச்சிக்காக போராடும் ஆட்கள் இருக்கும் வரை டத்தோஸ்ரீ பழனிவேல் போன்றவர்களின்  சதிநாச வேலைகளுக்கு இனி கட்சியில் இடம் இல்லை.  கிளைத்தலைவர்கள் சீரிய சிந்தனையோடு செயல்பட்டு வருகையில் அவர்களை குழப்ப நினைக்கும் எந்த வேலையும் இங்கே செல்லுபடியாகாது.

சொத்துக்கள் குறித்து உண்மைக்கு புறம்பாக கேள்வி எழுப்பும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது சொந்த முயற்சியில் கட்சிக்காக என்ன செய்துள்ளார். டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு அவர்கள் தனது தலைமையில் சொல்லும்படி சமுதாய சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். ஆனால்  டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் ம.இ.கா பல சங்கடங்களை சந்தித்ததோடு  கவுன்சிலர் முதல் செனட்டர் வரை  பல பதவிகளையும், பட்டங்களையும், பறிகொடுத்தது. உரிமைகளை  விட்டுக் கொடுத்தே நமது வரலாறுகளும்  சிதைக்கப்பட்டன.

இவர்   20 வருட காலம்  ம.இ.கா வில் பல பதவிகளில் இருந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக, துணை அமைச்சராக, முழுஅமைச்சராக , 5 வருட கால ம.இ.கா தலைவராக இவர் ஆற்றிய சாதனை தான் என்ன? சிலாங்கூர் மாநில ம.இ.கா வுக்கு ஒரு சொந்தக்கட்டிடம் வாங்கமுடியாத இவர்  இன்று மஇகா சொத்துக்கள் குறித்து சட்டங்கள்  தெரிந்தே உண்மைக்கு புறம்பாக கருத்துரைத்து வருவது இவரின் அரசியல் சுயநலத்தை காட்டுகிறது.

இவர் மீது இருக்கும் குறைகளை மறைக்க ஒரு போர்வையாக முறையாக இயங்கி வரும் சொத்துக்களை தனி நபர் சொத்து என்ற தோரணையில் சித்தரித்து மக்களை குழப்பி வருகிறார். ம.இ.கா வின் கட்டமைப்பில் உள்ள எம்ஐஇடி-இல் 61 உறுப்பினர்கள் இருந்த நிலையில் டத்தோ டி.ராஜகோபால், டத்தோ வி.சரவணன் மறைவுக்கு பின்னர் இப்பொழுது 59 உறுப்பினர்களோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த 59 உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் இதில்  எந்த பங்கும் கிடையாது. நிர்வாக அமைப்புக்கு துணை புரிய முடியுமே தவிர வேறு எந்த பங்குரிமை அதிகாரமும் இல்லை. இதில் நானும் உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலும் உறுப்பினர் கண்டிப்பாக இவருக்கு இது குறித்த முழு விவரம் தெரிந்திருக்கும்.

அதோடு 10.10.1994 முதல் 14.11.2011 வரை இயக்குநர் வாரியத்திலும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்  இருந்தார் என்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது. இந்த விளக்கங்கள் பல முறை பத்திரிக்கை வாயிலாகவும் விளக்கப்பட்டு விட்டன. இருப்பினும் குறிப்பிட்ட சிலர் முற்றிலும் சம்பந்தமில்லாமல் கருத்துரைத்து வருகிறார்கள்.

கட்சிக்குள் அரங்கேறிய அனைத்து குழப்பங்களுக்கும் காரணமான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மீண்டும் புதிய குழப்பத்தை அரங்கேற்ற தயாராகி விட்டார். சமுதாய சிந்தனை கொண்ட எந்த தலைவனும் இது மாதிரியான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஆகவே டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பில் யார் யாருக்கு மஇகா வின் சொத்துக்கள் தனி நபர் பெயரில் இருக்கிறது என்ற சந்தேகம் இருந்தாலோ, அல்லது அதற்கு ஆதாரங்கள் இருந்தாலோ அதனை பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள். இல்லையேல் மக்கள் முன்னிலையில்  விவாதத்திற்கும் ஏற்பாடு செய்யுங்கள் அனைத்திற்கும் விளக்கம் அளிக்க நான் தாயார்.

அவர்களிடம் ஆதாரங்கள் இருக்குமானால், மஇகா வின் சொத்துக்கள் தனி நபர் பெயரில்  இருக்கிறது என்று இவர்கள் சொல்வது உண்மையானால் இவர்களோடு இணைந்து அந்த சொத்துக்களை மீட்க நான் தயார்? இதனை டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு சவாலாக தெரிவிக்கிறேன். எனது சவாலை ஏற்க அவர் தயாரா? என டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here