மக்களுக்காகத் தலைவர்களா? தலைவர்களுக்காக மக்களா?

0
386

நாடு சுதந்திரம் அடைந்து 58 ஆண்டுகள் ஆகின்றன. இம்மாதம் 31-ஆம் தேதி அதன் கொண்டாட்டங்களும் நடக்கவுள்ளன. சுதந்திரத்திற்காக அக்காலத்தில் போராட்டம் நடத்திய தலைவர்கள் பலர்.மக்கள் நலன் கருதி தியாகம் செய்தவர்கள் பலர். பிரிட்டிஷாரின் மற்றும் ஜப்பானியர்களின் அடி உதைக்கு ஆளானவர்கள் பலர்.

இப்படி, பல தலைவர்கள் அன்று அனுபவித்த இன்னல்களால்தான் இன்று நாம் சுகத்தை அனுபவிக்கிறோம். அன்று மக்களுக்காகத்தான் பெரும்பாலான  தலைவர்கள்  இருந்துள்ளார்கள். இன்று நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுள்ளதற்கு  அன்று அவர்கள் தூரநோக்கு பார்வையோடு சிந்தித்ததே  காரணம். பல இனங்கள், சமயங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் கொண்ட ஏழ்மை சமூகத்தை ஒன்றிணைந்து நாட்டின் நிதி நிர்வாகத்தைப் பொறுப்புணர்வுடன் மேற்கொண்டால் நாடு தொடர் வளர்ச்சியைக் கண்டது. அப்போதும், சவால்கள்  இருந்தன.  ஆனால், தலைவர்கள் அதனைப் பொதுநலப்போக்கோடு அணுகியதால் களைய முடிந்தது.

இன்று நாட்டின் நிலை என்ன என்று வீதியில் போவோரிடம் கேட்டால் ஒரே குழப்பம் தான் என சட்டென பதில் வருகிறது. தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? மக்களின் அன்றாட அவலங்களைப் புரிந்துக்கொள்வார்களா?  அடுத்த தலைமுறையின்  மேன்மைக்குச் செயல் திட்டம் உண்டா? என்று அடுத்தடுத்து கேள்விகளும் விழுகின்றன.

அண்மையக் காலமாக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசப்படுகின்ற விவகாரம்  1MDB .தேசியப் பிரச்சனையாக  உருவெடுத்துள்ள வேளையில், பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.  இந்த விவகாரத்தை நாட்டின்  தலைவர்கள்  அணுகுகின்ற விதம் தருகின்ற விளக்கம் இன்றும் பல கேள்விகளையே எழுப்புகின்றது. இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் பதவியைத் தற்காப்பதற்கும் நாட்டின் தலைவர்களுக்கு நேரம்  போதாமல் உள்ளது.

 அடுத்து நமது சமூகத்தில் நிலவுகின்ற இன்னொரு கேள்வி அரசாங்கத்தில் இந்தியர்களை கட்சியான ம.இ.கா-வின் தலைவர் யார்?  இருவர் தாங்கள்தான் ஆதரவாளர்களோடு போராட்டம் செய்து வருகின்றனர். பல மாதங்களாக நீடிக்கின்ற  இப்போராட்டத்தை முடிப்பதற்கு  இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்பதும் தெரியவில்லை.

மக்களை கவனிக்க வேண்டிய தலைவர்கள் தங்கள் பிரச்சனையைத் தீர்ப்பதற்கே அல்லாடி வருகின்றனர்.

மக்களோ ஜி.எஸ்.டி-யின் தாக்கத்தால்,  ஏற்பட்ட விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க தத்தளித்து வருகின்றனர். அதற்குள் இப்போது ரிங்கிட்டின்  படுவீழ்ச்சி  அடுத்த விலைவாசி ஏற்றத்தை  முடுக்கிவிட்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலர் 4 ரிங்கிட் என்ற நிலையில் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களின் விலை உயரப்போகிறது. குறிப்பாக உணவுப் பொருள், ஆடை மற்றும் பல அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையேற்றம் பல சாமானிய மக்களின்  வாழ்க்கையைப் புரட்டிப்போடப் போகிறது. மலேசியாவில் 40 விழுக்காட்டு குடும்பங்கள்  2500 ரிங்கிட்டுக்கும் குறைவாக  வருமானம் பெறுகின்றனர். மேலும் 25 விழுக்காட்டு குடும்பங்கள் 3500 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் பெறுகின்றனர்.

இக்குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகப் போகும்  நிலையில் தலைவர்கள் தங்கள் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மக்கள் “பிளவுபடாத” ஆதரவை எங்களுக்குத் தர வேண்டும் என கேட்கிறார்கள்.

 யாருக்கு யார் ஆதரவு தருவது? தங்களுடைய வாழ்வாதார மேன்மைக்கு வழிகாட்டியாக அமைத்து அதற்கேற்ற திட்டங்களை வரைந்து  அதற்கு  செயல்வடிவம் கொடுத்து பொறுப்பாக செயலாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தால் இவர்களோ திரும்ப திரும்ப மக்களையே பகடைக்காயாகப் பயன்படுத்திவிடும் நிலை வந்துவிடும் என்ற அச்சம்தான் மேலோங்கியுள்ளது.

இந்த நிலை நீடிக்குமானால், நாடு அடைந்த சுதந்திரம் அர்த்தமற்றதாகிவிடும். அன்றையத் தலைவர்கள் செய்த தியாகம் பாழாகிவிடும்.

தலைவர்களே சிந்தியுங்கள்..-Vanakam Malaysia

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here