16 ம.இ.கா தலைவர்கள் 1 ஆண்டுக்கு இடைநீக்கம்: டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் அதிரடி

0
710

கோலாலம்பூர், 16 ஜூன் – ம.இ.கா-வில் மறுதேர்தல் நடத்துமாறு உத்தரவிட்ட சங்கங்களின் பதிவிலாகா மீது, டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல், டத்தோ சோதிநாதன், டத்தோ பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் பதிவு செய்த வழக்கில், நேற்று நீதிமன்றம் ம.இ.கா மறுதேர்தல் நடத்துமாறு நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து 2009-ஆம் ஆண்டு, மத்திய செயலவை உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் எச்சரித்திருந்தார்.

ஆனாலும், இன்று மத்திய செயலவை உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டதையடுத்து, அக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட 16 ம.இ.கா தலைவர்களின் கட்சி உறுப்பியத்தை 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் அதிரடியாக அறிவித்துள்ளார்.“நேற்றைய அறிக்கையில், இன்று மதியம் 12.30 மணிக்கு ம.இ.கா தலைமையகத்தில் 2009-ஆம் ஆண்டு மத்திய செயலவை உறுப்பினர்கள் சட்டவிரோத கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக நான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தேன்.

 ம.இ.காவின் இடைக்கால மத்திய செயற்குழு, ஜூன் 15 என தேதியிட்டு வெளியிட்ட  அவசரக் கூட்ட அழைப்பு அறிக்கை, 2009-2013-ஆம் ஆண்டு வரைக்குமான மத்திய செயலவை உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டது. மாறாக அந்த அறிக்கை, கட்சியின் சட்டதிருத்தங்களுக்கு உட்பட்டு,  ம.இ.காவின் தலைமைச் செயலாளரால் வெளியிடப்படவில்லை.

“ஜூன் 15-ஆம் தேதி, உடனடியாக நான் ம.இ.கா-வின் அனைத்து மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் மற்ற தலைவர்களையும், இடைக்கால மத்திய செயலவைக் குழுவின்  சட்டவிரோத கூட்டத்தை ரத்து செய்யுமாறு அறிக்கை வெளியிட்டேன். ஆனால், ஜூன் 15 என தேதியிட்ட அந்த அறிக்கையின் சாராம்சத்திற்கு மாறாக, இவர்கள் அந்த சட்டவிரோத கூட்டத்தை ரத்து செய்யவில்லை.

“இதன்மூலம், ம.இ.கா-வின் நலன்களுக்கு விரோதமாக இவர்கள் நடந்துக்கொண்டது தெளிவாகத் தெரிகிறது.ம.இ.காவின் அரசியல் சட்டப் பிரிவு 61.1 கீழ், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவராக எனக்களிக்கப்பட்ட அதிகாரித்திற்குட்பட்டு, கீழ்கண்ட அனைவரின்  ம.இ.கா உறுப்பியத்தையும் 12 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்கிறேன்’ என டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.

அந்த வகையில், மாண்புமிகு டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், மாண்புமிகு டத்தோ எம் சரவணன், மதிப்புமிகு டத்தோ ஶ்ரீ எஸ்.கே தேவமணி, திரு.என். ரவிசந்திரன், டத்தோ ஆர் கணேசன், டத்தோ எம்.தேவேந்திரன், டத்தோ கே.ஆர்.ஏ நாயுடு, டத்தோ வி.எம் பஞ்சமூர்த்தி, திரு. பி.மணிவாசகம், திரு.எஸ் ஆனந்தன், திரு. எம். மதுரைவீரன், மாண்புமிகு டத்தோ எம்.அசோஜன், திரு.பி. ஷண்முகன் மற்றும் திருமதி மோகனா முனியாண்டி ஆகியோர் ம.இ.கா உறுப்பினர்களாக 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்.’அந்த சட்டவிரோத நோட்டீசை கையெழுத்திட்ட மேலும் சில உறுப்பினர்களை நான் ஏற்கெனவே இடைநீக்கம் செய்துவிட்டேன்.

இவர்களின் இந்த இடைநீக்கம், ம.இ.காவின், 13.1, 13.1.1,13.1.2,13.1.3 மற்றும் 13.1.4 ஆகிய கட்சி அரசியலமைப்பு சட்டவிதிகளுக்குட்பட்டது” என ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here