தொட்டாலும் குறை விட்டாலும் குறை – இதுதான் கமலநாதனின் நிலை !

0
838

இந்த நாட்டு அரசாங்கத்திடம் முன்பு சம உரிமை கேட்டு வீதி ஆர்ப்பாட்டத்திற்கு வந்தோம். கிடைத்தது நமக்கு சில உரிமைகள். அதில் பிற இனங்களும் குளிர்காய்ந்தன, காய்ந்துக் கொண்டிருக்கின்றன.

ஆலயம், தமிழ்ப்பள்ளிக்கூடம், கல்வி, அரசாங்க வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், வணிகம் என பல முக்கிய  துறைகளில் பின் தள்ளப்பட்ட காரணத்தினால் பொங்கினோம், எழுந்தோம் வென்றோம்!

ஆளுங்கட்சி இந்தியர்களும் சரி, எதிர்க்கட்சி இந்தியர்களும் சரி, அனைவரும் ஒன்றாக இணைந்தோம் ஜெயித்தோம். 50 வருட கால ஆட்சியையே கவிழ்க்கும் அளவுக்கு சிறுபான்மையினமானாலும் நமக்கு வலுவும் திறனும் இருந்தது. மாற்றங்கள் சில ஏற்பட்டன.

கல்வியிலும், சமயத்திலும், பொருளாதாரத்திலும் நமது வெற்றிகள் இப்போது துளிர் விட ஆரம்பிக்கின்றன. பெருமைதான்! இருந்தாலும் நாம் சாணக்கியத்தனத்தை பயன்படுத்தாமல், சர்ச்சையை உருவாக்கி, எச்சிலையும் வானத்தைப் பார்த்து உமிழ்கின்றோம். இதனால் தான் அனைத்துத் திறமைகளும் இருந்தும், உலகுக்கே மூத்தவர்கள், நாகரீகம் கற்றுத் தந்தவர்கள், மூத்த சமயம், மூத்த மொழி என அனைத்திலும் முன்னோடிகளாகளாய் இருந்தும் சொந்த நாடு கூட இல்லாமல் வாழ்கிறோம்.

தன்மானத்தோடு வாழ்ந்தவர்கள் நாம் தான். ஆனாலும் கண்மூடித் தனமாக இருக்கும் உரிமையையும் இழந்து விடுவோமோ என்ற பயம் அடிக்கடித் தொற்றிக் கொள்கின்றது.

10 ஆண்டுகளுக்கு முன்பு கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். நமது தமிழ்ப்பள்ளிகளின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏழைகள் தமிழ்ப்பள்ளிகளை வாழ வைத்தார்களா அல்லது தமிழ்ப்பள்ளிகள் ஏழைக் குழந்தைகளை வாழ வைத்தனவா என குழம்பும் அளவிற்கு நமது தமிழ்ப்பள்ளிகளின் நிலை.

வரலாற்றில் முதன் முறையாக நமக்கு கல்வியமைச்சில் ஓர் இந்தியர். தமிழ்ப்பள்ளிகளில் நினைத்ததைச் சாதித்துக் கொள்ள நமக்கு நல்ல வாய்ப்பு.  இருந்தும் என்ன பயன்?

தொட்டாலும் குறை, விட்டாலும் குறை என்பது தான் கல்வித் துறையின் துணையமைச்சர் கலமநாதனின் நிலை. இவர் இந்தப் பதவிக்கு வந்த பின்பு தமிழ்ப்பள்ளிகளில் எத்தனையோ நல்ல மாற்றங்களைப் பார்க்க முடிகிறது.

தமிழனே தமிழனுக்கு உயிராம், அந்தத் தமிழனே தமிழனுக்கு துக்குக் கயிறாம்! கமலநாதன் பதவிக்கு வந்த ஓரிரு ஆண்டுகளில் நிறைய தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார் என்பது தான் உண்மை. இருந்தாலும், அரசியலும் பொறாமை குணமும் யாரைத் தான் விட்டது. காய்த்துக் கொண்டிருக்கும் மரம் கமலநாதன். அதனால்தான் கல்லடி பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இவர் பதவி ஏற்பதற்கு முன்பதாக தூங்கிக் கிடந்த 2012-ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை ஒரே வருடத்தில் முடித்துக் கொடுத்தவர். பேராசிரியர் இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் வழிநடத்தப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை தாமே தனது தலையில் சுமந்து, இந்திய குத்தகையாளர்கள் மனநிறைவளிக்கும்படி தேவையான அளவுக்கு நிதி உதவியை பிரதமரிடம் பெற்றுத் தந்தவர் கமலநாதன்.

ஆனால் இவர்ப் பற்றி நாம் நல்ல விஷயங்களை பேச மனமில்லை. இது வரையில் எத்தனையோ தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய பள்ளியை கட்டித் தந்திருக்கிறார். அதைப் பற்றி எழுதத் துணிவில்லாதவர்கள், சுயநலத்திற்காக ஏதாவது பள்ளியைச் சுட்டிக் காட்டி, அதில் கமலநாதனை புகுத்தி, அவர் ஒரு தமிழர் என்று கூட எண்ணாமல் அசிங்கப்படுத்தி வேடிக்கைப்ப் பார்க்கும் கேவலமான இனமாக நாம் மாறிவிட்டோம்.

சீ போர்ட் தமிழ்ப்பள்ளியின் சர்ச்சையின் அதனை நாளிதழ்களில் மிகைப் படுத்திய விதமும் இன்னும் நினைவிருக்கின்றது. புதிய கட்டத்தைற்குச் செல்ல மாட்டோம் என கூறி, அப்பாவிக் குழந்தகைளை தெருவுக்குக் கொண்டு வந்து, புதிய பள்ளிக்குச் செல்லவிடாமல் தெருவில் ஆர்ப்பட்டம் செய்து ஏழை மாணவர்களின் கல்வியைப் பாழ்படுத்தியதும் நமது இனம் தான்.

இப்போது புதிதாய் வெடித்திருக்கின்றது சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் விவகாரம். மலாய் மற்றும் தமிழ் ஊடகங்களில் ஒரு தமிழனைப் பற்றித் தரக் குறைவான தாக்கல். தாக்கப்பட்டதும் தமிழன், தாக்கிக் கொண்டிருப்பதும் தமிழர்கள்.

இந்த சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் விவகாரம் 2012-ம் ஆண்டு உருவானது. இந்தப் பள்ளி மோசமான நிலையில் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தியது தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடுத் திட்ட வரைவு. உடனடி உதவித் தேவைப்படும் பள்ளிக்கு உடனடி உதவி வழங்காமல் 2013-ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சேர்த்தது யாருடைய குற்றம். 2012-ம் ஆண்டுக்கான 40 தமிழ்ப்பள்ளிகளின் பட்டியலில் சுங்கை பாக்காப் தமிழ்பள்ளியின் பெயரை இணைக்காமல் விட்டது தமிழ்ப்பள்ளிகளின் திட்ட வரைவின் தவறுதானே?

2012-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டு பள்ளிகளை பட்டியலிடும் போது கமலநாதன் துணை அமைச்சர் பதவியில் கூட இல்லை என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

கமலநாதன் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுத்த வாக்குகள் எதையும் நிறைவேற்றாமல் இல்லை. அறிவு கெட்ட ஆணவப் பட்டு சொல்வதைப்போல கமலநாதன் பொய்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பொய்யாய் இருந்தால் ஒரு முறை சொல்லி மறந்திருக்கலாம், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போல. செல்லும் இடத்திலெல்லாம் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மானியம் கிடைத்துவிடும் என்று உறுதியாக கமலநாதன் சொல்வது, அந்தப் பள்ளிக்கு நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதற்கு சான்று. ஆக நமக்காகக் கிடைத்திருக்கும்  இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அறிவு பூர்வமாக தேவையானதை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அரசியல் காரணத்துக்காக அப்பாவித் தமிழனை பழி வாங்கி விடாதீர்கள். நாளை இதே பதவிக்கு வேறு ஒரு இனத்தை அமர்த்த வெகு நேரம் ஆகாது நண்பர்களே! கமலநாதனுக்குக் கை கொடுங்கள். தமிழ்ப்பள்ளிகளை ஒற்றுமையாக வாழ்விப்போம்

எழுதியவர்,

டாக்டர் அ.வள்ளுவன்

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •