போராட்டம் போர்க்களமானது சமுதாயத்திற்கு நல்லதல்ல! டத்தோ டி.மோகன் விளக்கம்

0
468

மஇகா தேசியத்தலைவருக்கான வேட்புமனுத்தாக்கலின் போது உண்மை விளங்காமல் போராட்டம் என்ற பெயரில் போர்க்களம் அரங்கேற்றப்பட்டது வருத்தம் தெரிவிக்கக்கூடியது. இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டு சமுதாயத்தினரின் மத்தியில் மஇகாவின் தோற்றத்தை களங்கப்படுத்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல. போராட்டத்தின் வழி தீர்வு பிறக்க வேண்டுமே தவிர அதன் வழி புதிய பிரச்சனை எழுவது சமுதாயத்திற்கு நன்மையை கொண்டு வராது என டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

மஇகா வின் தேர்தலில் ஏற்பட்ட முறைகேட்டினால் எங்களது தரப்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அந்த போராட்டங்கள் கட்சியையும், சமுதாயத்தையும் காக்க முற்பட்டதே தவிர விரோத போக்கோடு தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை. எங்களைப்பொறுத்த வரையில் முழுக்க முழுக்க மஇகா வில் ஜனநாயகத்தோடு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.

நாம் எந்த இலக்கை நோக்கி செல்கிறோமோ அதனை மையப்படுத்தி கட்சி, சமுதாய நலன் சார்ந்த போரட்டங்கள் அரங்கேறுவதை தவறு என்று சுட்டிக்காட்ட முடியாது.ஆனால் அந்த போராட்டங்கள் போர்க்களமானால் அதில் பாதிக்கப்படப்போவது யார்? இரண்டு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டிருப்பது அவசியமா? காவல் துறை அதிகாரிகளும், ஒரு சில பத்திரிக்கையாளர்களும் கல்வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்டது முறையா? என அவர் வினவினார்.
கடந்த காலங்களிலும் மஇகா வில் பல விதமான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. போராட்டங்கள் நிகழ்வதையும், அதன் வழி தீர்வுகள் பிறப்பதையும் வரவேற்கலாம். ஆனால் எந்த நோக்கத்துக்காக போராடுகிறோம் என்பது முக்கியம். ஆர்.ஓ.எஸ் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காது தன்மூப்பான நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கைகளை தவறு என்று சொல்லி அதனை சீர்குலைக்க நினைப்பதும், கட்சிக்குள் பிரிவினைகளை உண்டாக்குவதும் சரியன்று.

ஜனநாயகத்தோடு அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு மஇகாவின் புதிய தலைமை புத்துணர்ச்சியோடு அமைந்துள்ளது. பழனி தரப்பில் இருப்பவர்களின் கருத்துக்களுக்கும் மத்திய செயலவையில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற உறுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இனி இது மாதிரியான சம்பவங்கள் அரங்கேறாமல் இருப்பதே கட்சிக்கும், சமுதாயத்திற்கும் நன்மையை கொடுக்கும்.

கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். இந்த வேளையில் ஜனநாயகத்திற்கு போராடிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியையும், புதிய தலைமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here