கோலாலம்பூர் (Mytimes) – குடும்பம் எனும் சக்கரத்தில் முக்கியமான அச்சானியாக கருதப்படுவது  பெற்றோர் ஆவர். அதில் தாயின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. குழந்தைகளிடம் அதிகம் நேரம் இருப்பவர் தாய்தான். குழந்தைகளுக்கு நற்பண்புகளை கற்றுக்கொடுப்பதிலும், குழந்தைகளை முறையான வழியில் வளர்த்து  ஒழுக்கத்தை புகட்டுவது போன்ற முக்கிய பொறுப்புகளில் மகளிர் பெரும் பங்கை வகுக்கின்றனர்.

குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் அமைதியை உறுதி செய்வதிலும் இவர்களே முதன்மையாக இருக்கின்றனர். எனவே மகளிரின் வளர்சியும் அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிகொணர்வது அவசியமாய் கருதி மலேசிய இந்து தர்ம மாமன்றம், மகளிருக்கான தேசிய ரீதியிலான பேராற்றலுடமை கருத்தரங்கத்தினை நடத்துகின்றன.

இந்த கருத்தரங்கம் இருநாள் ஓரிரவு  மற்றும் ஐம்பது பங்கேற்பாளர்களை இலக்காகக்கொண்டு இந்துக்கள் அதிகமாக வசிக்கும் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகின்றது. இந்து மதத்தின் அடிப்படை கொள்கைகள், மகிழ்ச்சியான குடும்பம் அமைப்பதில் மகளிரின் பங்கு, தொழில் வளர்ச்சி வழிகாட்டுதல்கள் , ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இல்லங்களில் பூஜை நடத்தும் முறை, பட்டறைகள் , குழு விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் போன்ற பல தகவல்கள் இந்த கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. மிகவும் பக்குவப்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் சமய பேராசிரியர்கள் துணைக்கொண்டு இக்கருத்தரங்க்கம் வழிநடத்தப்படுகிறது.

கலந்துக்கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு சைவ உணவு மற்றும் தங்குமிடம் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இக்கருத்தரங்கு முற்றிலும் இலவசமாக மகளிரின்,  நன்மையூட்டும் உருமாற்றத்திற்காக  தேசிய ரீதியில் நடத்தப்படுகின்றது. நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கருத்தரங்க்கில் இந்து சமயத்தை சார்ந்த அனைத்து மகளிர்களும் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

தேசிய ரீதியில் இக்கருத்தரங்க்கம் மிக சிறப்பாக மகளிரின் ஆதரவோடு நடத்தப்பட்டு வருகின்றது என்பது மகிழ்ச்சியளிக்கும் தகவலாகும். இந்து மதத்தின் தர்ம போதனைகளின் வழி, ஆன்மீகம் மற்றும் சமூக ரீதியாக நல்ல சிந்தனை முதிர்ச்சி கொண்டு மகளிர் தங்கள் குடும்பத்தை வழிநடத்தி , அமைதியும் சுபிட்சமும் நிலவ செய்வதே இக்கருத்தரங்கின் நோக்காகும். (Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here