கெடா அணியுடனான ஆட்டத்தில் பிரம்மாண்ட வெற்றி! பிரிமீயர் லீக் செல்ல வாய்ப்பு கிட்டுமா?

0
477

சுங்கைப்பட்டாணி ஆக 18 (MyTimes) – இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து எப்ஏஎம் கிண்ணப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் நமது எம்ஐஎஸ்சி – மிஃபா அணி நேற்று நடைபெற்ற கெடா அணியுடனான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 7 – 0 என்ற கோல்கணக்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து நமது அணி பிரிமீயர் லீக்கில் பங்கெடுக்குமா? முதல் இரண்டு இடங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிட்டுமா? என சமுதாயத்தினர் மத்தியில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் அவர்களிடம் வினவிய போது அவர் கூறியதாவது கெடா அணியுடான வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக 7-0 என்ற கோல்கணக்கில் முடிந்ததோடு, நமது அடைவு நிலையை எட்டுவதற்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 24 நிமிடத்தில் 3-0 என்ற நிலையில் நிறுத்தப்பட்டு நேற்று காலை ஆட்டம் தொடரப்பட்டது. இறுதியில் நமது அணியின் அதிரடியால் 7-0 என்ற கோல்கணக்கில் வெற்றி கிட்டியது.

மேலும் நமது அணி 15 ஆட்டங்களை நிறைவு செய்துள்ள வேளையில் 10 ஆட்டங்களில் வெற்றியும், 3 ஆட்டங்களில் சமநிலையும், 2 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு 36 புள்ளிகளோடு 2 வது இடத்தில் உள்ளது. மலாக்கா அணி 36 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இரு அணிகளுக்கும் தலா 1 ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் மலாக்கா அணி கே.எல்.யெங் பைட்டர்ஸ் அணியுடனும், நமது அணி ஏர் ஆசியா அணியுடனும் விளையாடுகின்றன.

இதில் நாம் இதே அதிரடியை வெளிப்படுத்தி அதிக கோல்கள் அடித்து வெற்றியையும், மலாக்கா அணி தோல்வியை தழுவும் பட்சத்தில் நாம் கோல்கணக்கின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடிக்க வாய்ப்பு கிட்டும்.

அதோடு எப்.ஏ.எம் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அதாவது முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கு விளையாட வாய்ப்பும் ஏற்படும். நமது அணியின் அடுத்த ஆட்டம் வருகின்ற 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை யூபிஎம் திடலில் மாலை 4.45 மணியளவில் ஏர் ஆசியா அணியுடன் நடைபெறவிருக்கிறது. இந்த ஆட்டத்திலும் அதிரடி வெற்றி பெற கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொருளாதார ரீதியில் நமது அணி சிறியது என்ற நிலையில் 2 வது இடத்தில் இருப்பது நமக்கு பெருமைக்குரிய ஒன்றாக இருப்பினும் பிரீமியர் லீக்கில் பங்கெடுப்பதே நமது அடைவுநிலை. இதனை அடைவதற்கு ஏற்ப நமது முயற்சிகள் தொடரும். எப்பொழுதும் போல் நமது சமுதாயத்தினர்களின் ஆதரவு தொடர வேண்டும் என்று டத்தோ டி.மோகன் கேட்டுக்கொண்டார். – MyTimes

LEAVE A REPLY