கோலாலம்பூர் (Mytimes)– டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு ஆதரவாளர்கள் அவர்களுடைய சட்டத்திற்குப் புறம்பான தேர்தல்தான் செல்லும் என்று நினைத்தால் சங்கப் பதிவிலாகாவிடம் முறையாக விண்ணப்பம் செய்து உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் செய்துள்ள விண்ணப்பத்தின் முடிவிற்கு பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து வெற்றுப் பதாகைகளைக் கொண்டு “ டாக்டர் சுப்ரா சங்கப் பதிவிலாகவை ஏமாற்றி விட்டார்” “டத்தோ சரவணன் தார்மீகம் குன்றியவர்” என்று சமுதாயத் தலைவர்களைச் சீண்டும்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ம.இ.கா நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்கள். நடுத்தெருவில் ஆர்பாட்டம் செய்து வீதிக்குக் கொண்டு வந்தார்கள். தற்பொழுது கீழ்த்தரமான பதாகைகளைக் கொண்டு கீழறுப்பு வேலைகளைச் செய்வதுதான் அவர்களுக்குரிய நேர்மையும் தார்மீகத் தன்மையுமா?

ஆடத் தெரியாதவன் கூடம் கோணல் என்றதைப் போல் ம.இ.காவை முறையாக வழிநடத்தவும் திராணியற்று, சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கத் தெரியாத பழனிவேல் தரப்பினர், தற்பொழுது தேர்தலை முறையாகவும், நியாயமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு நடத்திய டாக்டர் சுப்ராவைக் குறைகூறுவது அறிவிலித்தனமாக உள்ளது.

டத்தோஸ்ரீ பழனிவேலின் அடித்தளமில்லாத தலைமைத்துவத்தில் ம.இ.காவினர் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாவிட்டன. தற்பொழுது டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்களின் புதிய தலைமைத்துவம் வழி ம.இ.கா வலிமைப் பெற்று சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தற்பொழுது ம.இ.காவின் சீரான நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாத சுயநலவாதிகளான பழனிவேல் தரப்பினர் இப்படி முறையற்ற வேலைகளைச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 25ஆம் திகதி ஜூன் மாதம் சங்கப் பதிவிலாகா வெளியிட்டிருக்கும் கடிதத்தில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்தான் இனி ம.இ.காவின் தலைவர் என்பதைத் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுவிட்ட போதிலும், பழனிவேல் தரப்பினர் இன்னும் எங்களீடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை என சங்கப் பதிவிலாகாவின் அதிகாரி இன்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒட்டுமொத்தத் தரப்பினரும் போதிய விளக்கம் தந்த போதிலும் கிணற்றுத் தவளைகளாக இருந்து ஒன்றுமே தெரியாதவர்கள் போல் செயல்பட்டுக் கொண்டு, சமுதாயத்தைக் குழப்பி வருவதைக் காட்டிலும் அற்பத்தனம் வேறு எதுவுமில்லை. தங்களின் சுயநலத்திற்காகப் பொதுநலத்தை மறந்த பழனிவேல் தரப்பினரின் இந்தக் கீழ்த்தரமான செயல்கள் வானத்தைப் பார்த்து எச்சில் துப்புவதைப் போல்தான் உள்ளது.

பழனிவேல் தரப்பினர் அவர்கள் நீதிமன்ற முறையீட்டின் முடிவு வரும்வரையில் அவர்களுடைய இத்தகைய வெற்றுச் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து விட்டு எங்களுடைய நடவடிக்கைகளையும் எங்களுடைய தீர்க்கமான முடிவையும் மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டாமென ம.இ.காவின் தகவல் பிரிவு அதிகாரி டத்தோ வி.எஸ் மோகன் எச்சரிக்கை விடுத்தார்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here