மலேசிய காற்பந்து அணியின் தரம் மிக மோச சரிவு நிலை, ராஜினாமா தீர்வல்ல- டத்தோ டி.மோகன் ஆவேச சாடல் !

0
408

          Kuala Lumpur(MYTIMES)-மலேசிய காற்பந்து அணியின் தரம் படிப்படியாக மிக மோசமான சூழலை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. கடந்த கால வரலாறுகளையும், சாதனை படைத்த மலேசிய அணியின் ஆட்டக்காரர்களையும் நினைத்துப்பார்க்கையில் இன்றைய அணியின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. என்னைப்பொறுத்த வரையில் விளையாட்டுத்துறை சார்ந்து இனரீதியாக முக்கியத்துவம் அளிப்பது தடுக்கப்பட வேண்டும். மேலும் அணியின் தரம் உயர்வதற்கான அனைத்து முயற்சிகளும் மோற்கொள்ளப்பட வேண்டும் என டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

   முன்னர் காலங்களில் இருந்த நமது அணியின் வேகமும், தரமும் குறைந்து போனதற்கு என்ன காரணம்? அதுமட்டுமில்லாது தோல்வி கண்டு விட்டால் பயிற்றுநர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சொல்வது மட்டும் தீர்வாகுமா? ஐக்கிய அரபு சிற்றரசு அணியிடம் நமது அணி 10 – 0 என்ற நிலையில் தோல்வி கண்டிருப்பது மலேசிய காற்பந்து ரசிகர்களிடையே மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமது அணியின் தரத்தை உயர்த்த நமக்கு அனைத்து விதமான வசதிகளும் இருக்கின்றன. அப்படியிருக்கையில் நாம் தோல்விகளை தழுவி வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப நமது நடைமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டு மாநில அளவில், தேசிய அளவிலான பயிற்சி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டால் காற்பந்து துறை சார்ந்த ஆர்வமும், தரமான விளையாட்டாளர்கள் உருவாக்கம் காணவும் வாய்ப்பாக அமையும்.

    மாற்றங்கள் ஏற்படுத்தப்படாமல் இதே சூழல் தொடருமானால் நாட்டின் காற்பந்துத்துறை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும். இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை விளையாட அனுமதிப்பது குறைவாக உள்ளது. பள்ளி அளவில் திடல் வசதிகள் குறைபாடும் உள்ளன. போட்டி விளையாட்டு ஏற்பாடுகளும் குறைந்து கொண்டே போகிறது. இது மாதிரியான அடிப்படை பிரச்சனைகளையும் களைந்தால் மட்டுமே நம்மால் காற்பந்துத்துறையில் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.

    அதுமட்டுமில்லாமல் விளையாட்டுத்துறை சார்ந்து இன ரீதியிலான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காது திறமை வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை ஊக்கப்படுத்த முனைப்பு காட்டப்பட வேண்டும். காற்பந்து துறை முன்னேற்றத்தை மையப்படுத்தி நடத்தப்படும் போட்டிகளுக்கான செலவுகள் குறைக்கப்பட்டு நாடு தழுவிய நிலையில் அதிகமான போட்டி விளையாட்டுக்களை ஏற்படுத்தி வாய்ப்புகளை அதிகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

   மலேசிய அணியின் பலவீனங்களை உடனடியாக சரி செய்ய அதிரடியான மாற்றங்கள் அவசியம் என்பதை மலேசிய காற்பந்து சங்கம் உணர்ந்து பார்த்து காலத்திற்கேற்ற மாற்றங்களை செய்ய முன் வர வேண்டும் என டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.-MYTIMES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here