மனம் புலம்ப வேண்டாம், நீதிமன்றத்தில் சந்திப்போம்! – ம.இ.கா தகவல் பிரிவு

0
1619

மஇகாவில் குழப்பத்தை ஏற்படுத்த புதுப்புது கதைகளை ஜோடித்து நடித்துக்கொண்டிருக்கும் ரமணன் சம்பந்தமில்லாமல் புலம்புவதை நிறுத்தி விட்டு தனது வேலையை பார்ப்பது நல்லது. இவருடைய புலம்பல் சில குழப்பவாதிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். எங்களைப்பொறுத்த வரையில் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில் அங்கு பார்த்துக்கொள்வோம்.அதனை விடுத்து தேவையில்லாத ஆர்ப்பரிப்புகள் வேண்டாம் என டத்தோ வி.எஸ்.மோகன் தலைமையிலான மஇகா தகவல் பிரிவு குழுவினர் பதிலடி கொடுத்துள்ளார்கள்.
2013-ம் ஆண்டு மஇகா தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட தில்லுமுல்லுகள் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். ஆர்.ஓ.எஸ் இன் உத்தரவின் படி மறுதேர்தலை நடத்தாமல் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நீதிமன்றம் சென்று தோல்வியை தழுவினார். அந்த சூழலில் கட்சியை காப்பாற்ற கிளைத்தலைவர்களின் பேராதரவோடு தலைவரானார்.இது தான் உண்மை நிலை இதனை மஇகாவினர் அனைவரும் அறிவர்.
அவசர பொதுக்கூட்டத்தை தடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சில குள்ளநரிகள் செய்யும் வேலைகள் இங்கே எடுபடாது. 1000 கிளைகளை திருடியதாக பொய்க்குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள்.  இதில் உண்மை இருக்கிறதா? டாக்டர் சுப்ரா அவர்கள் அனைவரையும் அரவணைத்து கட்சியில் இணைந்து சேவையாற்ற அழைத்தார். இந்த அழைப்பை ஏற்று பலர் வந்துவிட்டார்கள் ஆனால் சிலர் வெளியில் இருந்து கொண்டு குழப்பத்தை விளைவிக்க முயல்கிறார்கள்.
கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கட்சியின் மறுதேர்தல் சட்டப்பூர்வமாக  நடந்தது. எந்தவிதமான குழப்பங்களுக்கும் இடமளிக்காமல் முறையாக நடந்தது. கட்சியில் இருக்கின்ற 3700 கிளைத்தலைவர்களும் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை ஆதரிக்கிறார்கள். இமெயில் அனுப்பியுள்ளார்கள் என சொல்லி கட்சிக்குள் குழப்பத்தை  ஏற்படுத்த முடியாது. இமெயில் வைத்து ஆர்.ஓ.எஸ் கட்சியின் விவகாரத்தை தீர்மானிக்கவில்லை என்பது அனைவருக்கும் விளங்கிவிட்டது. ஆகவே பொய்ச்செய்திகளை சிலர் தங்களுக்கு சாதகமாக வெளியிட்டு வருகிறார்கள்.
பதவி மோகத்தின் அடிப்படையில் சிலர் அரசியல் சூழ்ச்சிகளை நடத்தலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்கள். பிறகு எதற்கு அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்கவில்லை. வழக்கின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாதா?
டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்கள் தலைவராக பொறுப்பு வகித்த பிறகு அனைவரும் வேலை செய்யும் ஒரு வடிவமைப்பை ஏற்படுத்தி திட்டமிட்டுள்ளார்.அதன் படி அனைவரும் சமுதாய சிந்தனையை மையப்படுத்தி அதன் முன்னேற்றத்திற்காக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். ஆகவே மஇகாவை நாசப்படுத்தும் வேலையில் இறங்காமல்,சுயநலத்திற்காக கொள்கை இழக்காமல் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அமைதியாக இருப்பதே நல்லது என டத்தோ வி.எஸ்.மோகன் தேசிய ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் மற்றும் குழுவினர் தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.- (மஇகா தகவல்பிரிவு )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here